கொல்கத்தா: முன்னேற்பாடு எதுவுமில்லாத மோடி அரசின் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள் 10,000 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் நிதியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிவரும் பேளூர் மடத்திற்கு ஏற்கனவே 20,000 கிலோ அரிசியை வழங்கியுள்ளார் சவுரவ் கங்குலி.
இந்நிலையில், மக்களுக்கு உணவு வழங்கிவரும் அமைப்பான கொல்கத்தாவில் செயல்படும் இஸ்கான் மையத்திற்கு, தினமும் 100,00 பேருக்கு உணவு வழங்குவதற்கான நிதியை அளித்துள்ளார் கங்குலி.
இதற்காக, இஸ்கான் மையத்திற்கு வருகைதந்த கங்குலி, அங்கு உணவு சமைக்கும் இடத்தைப் பார்வையிட்டார்.
இஸ்கான் மையம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேருக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகிறோம். கொல்கத்தாவில் மட்டுமே 100,00 பேர் பயன்பெறுகிறார்கள். தற்போது கங்குலி, கூடுதலாக 100,00 பேருக்கு உணவு வழங்குவதற்கான நிதியை அளித்துள்ளார். அவரின் இந்த செயல், அவர் ஆடிய சிறந்த இன்னிங்ஸாக அமைந்துவிட்டது என்று பாராட்டுத் தெரிவித்துள்ளது.