ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நியாய் திட்டம், தேர்தலில் மாற்றத்திற்கான காரணியாய் இருக்கும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தலின் முடிவில், பிரதமர் மோடி வீட்டிற்கு செல்வது உறுதி என்றும் கட்டியம் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2008ம் ஆண்டு உலகளாவிய அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. நாங்கள் தற்போது அறிவித்துள்ள நியாய் திட்டம், தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணமதிப்பிழப்பு மற்றும் ரஃபேல் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். பாரதீய ஜனதா அலுவலகங்களே, கருப்பை பணத்தை உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.
வருகின்ற மே 23ம் தேதி நரேந்திர மோடி வீட்டிற்கு செல்வது உறுதியாகிவிட்டது. அவரின் பித்தலாட்டங்களை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். தனது தோல்விகளை மறைப்பதற்காக, தேவையற்ற உணர்ச்சிப்பூர்வ விஷயங்களைக் கிளறி விடுகிறார் நரேந்திர மோடி.
மோடி அரசின் அலட்சியமே புலவாமா தாக்குதலுக்கு காரணம். கடந்த 1971ம் ஆண்டு போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகும், இந்திய ராணுவத்தை தனது அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை இந்திரா காந்தி. ஆனால், இவர்கள் இந்திய ராணுவத்தை தமது அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்.
சில மாநிலங்களில் எங்களுக்கு சரியான கூட்டணி அமையாமல் போயிருக்கலாம். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் நிலைமை மாறும். மக்களின் விருப்பத்திற்கிணங்க கூட்டணிகள் அமைக்கப்படும்” என்றார்.
– மதுரை மாயாண்டி