மைசூரு: கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில், ஒரு கழிவறைக்குள், சிறுத்தையும் நாயும் 7 மணிநேரங்கள் சிக்கிக்கொண்டு, இரண்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

காலையில் 7 மணியிலிருந்து, பிற்பகல் 2 மணிவரை, அந்த இரண்டு விலங்குகளும் சிறிய கழிவறைக்குள் அடைபட்டு கிடந்துள்ளன.

கர்நாடகாவின் பைலினேல் கிராமத்தில், ஒரு நாயை விரட்டிக்கொண்டு வந்துள்ளது சிறுத்தை ஒன்று. சிறுத்தையிடமிருந்து தப்பிக்க நினைத்த நாய், ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்துள்ளது. ஆனால், சிறுத்தையும் அந்தக் கழிவறைக்குள் புகுந்துவிட்டது. ஆனால், ஒரு சிறிய இடத்திற்குள் நாய் சிக்கியதும், சிறுத்தை உடனடியாகப் பாய்ந்து நாயைக் கொன்றுவிடவில்லை. மாறாக, அமைதி காத்துள்ளது.

சிறுத்தை ஒரு மூலையில் படுத்திருக்க, நாய் பயந்து நடுங்கியபடியே, ஒரு ஓரத்தில் இருந்துள்ளது. அந்த வீட்டின் பெண்மணி ஒருவர், கழிவறைக்குள் இந்த மிருகங்கள் இருப்பதை அறிந்து, கழிவறையின் கதவைப் பூட்டிவிட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் விபரம் தெரியவந்தது.

வீட்டிலிருந்து தனியே இருந்த கழிவறையில் சிக்கிய 2 மிருகங்களையும், சம்பந்தப்பட்ட மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுத்தைக்கு உணவாக வேண்டிய நாய், 7 மணிநேர மரண பீதிக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது. சிறுத்தையை வனத்துறையினர் காட்டில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.