டில்லி:
நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேடு குறித்து எனது பதவி காலத்தில் எச்சரித்தேன் என்று கூறுவது அபத்தமானது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் ரூ.11,000 கோடி முறைகேடு செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், தற்போதைய சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரகுராம் ராஜன் வெளியிட்டதாக ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதில்,‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் நிரவ் மோடி மோசடி குறித்து நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்தபோது எச்சரித்தேன். ஆனால், அவர்கள் என்னை அமைதியாக இருக்கும்படி கூறினர். தொடர்ந்து 2014 மே மாதம் வரை கடன் கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிஎன்பி மோசடிக்கு இப்போது என் மீது குறை கூறுவது ஏன்?’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் அனைத்து சமூக வலை தளங்களிலும் பரவியது. இதை பலர் உண்மை என நம்பி பகிர்ந்தோடு, பலர் எதிர் கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். டுவிட்டரில் ரகுராம் ராஜனிடம் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் ‘பூம்’ என்ற இணையதள இதழ் இது குறித்து இமெயில் மூலம் ரகுராம் ராஜனிடம் கருத்து கேட்டது. இதற்கு ரகுராம் ராஜன் அளித்த பதிலில்,‘‘ இது முழுக்க முழுக்க அபத்தமானது. தூண்டிவிடும் செயல்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.