கான்பெரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியானது, சில அம்சங்களில் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
கடந்த 2 போட்டிகளில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் முறையே 374 ரன்கள் & 389 ரன்களை அடித்தது.
அந்த ரன்களை சேஸிங் செய்த இந்தியா, முதல் போட்டியில் 308 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 338 ரன்களையும் அடித்தது. அதாவது, எளிதில் துவண்டு விடாமல், 300 ரன்களை இரண்டு போட்டிகளிலுமே தாண்டியது.
ஆனால், கடந்த 2 போட்டிகளை ஒப்பிடுகையில், இன்று ஆஸ்திரேலிய அணிக்கு 303 என்ற எளிய இலக்குதான். இந்திய அணியிடம் இருந்ததோ 5 புரபஷனல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே.
ஆனாலும், அந்த இலக்கை, ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களால் வெற்றிகரமாக சேஸிங் செய்ய முடியவில்லை. 289 ரன்களுக்கே சுருண்டு விட்டனர்.
இதில் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், ஆஸ்திரேலியா, கடந்த 2 போட்டிகளில் குறைந்தபட்சம் 6 பவுலர்களைப் பயன்படுத்தியும், இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.
ஆனால், இன்றையப் போட்டியில், இந்திய அணி 5 பவுலர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுகளை 50 ஓவர்களுக்குள்ளாகவே கைப்பற்றியுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.