“திரைப்பட நடிகைகள் தங்கள் உடல்தெரியும் ஆடைகளை அணிவது சரியல்ல” என்று தேசிய விருது பெற்ற முதுபெரும் நடிகை சாரதா கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவில் நடிகை சாரதாவும் இடம்பெற்றிருந்தார்.

4 ஆண்டுகளுக்கு முன் கேரள முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது வெளியாகி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் வெளியான நிலையில் அதில் நடிகை சாரதா கூறியிருப்பதாக வெளியான தகவல் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா தொடர்பான அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க பரிந்துரை வழங்கியுள்ள நடிகை சாரதா, “இன்று தொழில்துறையில் உள்ள பலர் (பெண்கள்) உடை அணியும் விதம் சரியல்ல. மறைப்பதை விட, அவர்களின் உடை அணிவது அவர்களின் உடல் உறுப்புகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது” என்று தனது அறிக்கையில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

மேலும், முந்தைய காலகட்டங்களில், செட்களில் பாலியல் இரட்டை அர்த்தத்துடன் உரையாடல்கள் இல்லை. அதேபோல, நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அல்லது டெக்னீஷியன்களை தொடுவது போன்ற பாலியல் வன்கொடுமைகள் எதுவும் செட்களில் இல்லை. இன்று திரையுலகில் இதுபோன்ற தொல்லைகள் இல்லை என்று சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், “இன்றைய சமூகம் முந்தைய காலத்திலிருந்து வேறுபட்டது. புதிய தலைமுறையின் கலாச்சாரம் வேறுபட்டது. எனவே அனைவரும் சுலபமாக ஒருவரோடு ஒருவர் கலந்துவிடுகிறார்கள். அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ஒத்துப்போதல் என்பது தற்போது வெளிப்படையான ஒன்றாக ஆகிவிட்டது ஆனால் அப்போது ஒளிவுமறைவாக இருந்தது” என்று நடிகை சாரதா தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமா துறையை ஆட்டிப்படைக்கும் 15 பிரபலங்கள்… ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் கேரளாவில் பரபரப்பு…