சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி கோரி ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20,000 விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் ஒருசில விண்ணப்பங்கள் தவிர விதிகளுக்கு உட்பட்டு பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட வரைபடத்தில் உள்ளது போல் அல்லாமல் பல கட்டிடங்கள் விதியை மீறி விலகி கட்டப்படுகிறது.
இனி, இதுபோன்று அனுமதி பெற்று கட்டப்படும் கட்டுமானங்கள் அனைத்தையும் பிளிந்த் மட்டம் (Plinth level) வரும் போதே அந்தந்த வார்டு இளநிலை பொறியாளர் (JE) மற்றும் உதவி பொறியாளர் (AE) ஆகியோர் ஆய்வு செய்து விதிமீறல் இருக்கும் பட்சத்தில் அந்த கட்டுமான பணியை நிறுத்தி அதுகுறித்த கடிதத்தை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
உதவி பொறியாளர் அளிக்கும் இந்த பிளிந்த் ஆய்வு கடிதம் உள்ள கட்டிடங்களை இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
25 சதவீத கட்டுமான பணிகளை ஐந்து வார்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள உதவி செயற் பொறியாளர் (Assistant Executive Engineer – AE2) ஆய்வு செய்ய வேண்டும்.
தவிர, மண்டல செயற் பொறியாளர் (Zonal Executive Engineer) 5 சதவீத கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விதிமீறல் கட்டிடங்கள் குறித்து புகார் ஏழும் பட்சத்தில் அந்தந்த வார்டு இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.