சென்னை: இந்துசமய அறநிலையத்துறையின் ஆலோசனை குழு தலைவராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி கடுமையாக சாடினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் எஸ்.ஸ்ரீதரன் என்பவர், இந்து மத மற்றும் அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலினை இருக்க தடை விதிக்க வேண்டும் என்றும்,ஸ்டாலின் ஒரு நாத்திகர் என்பதால், அவர் இந்து மத மற்றும் அறக்கட்டளைத்துறைக்கு தலைவராக இருக்க இந்துமத மக்களின் இந்து மத நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக அவர் ஒரு இந்து கடவுளின் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளாதவர்கள் , இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் தலைவராக இருக்கக்கூடாது, முதல்வர் ஸ்டாலின் அதன் தலைவராக இருக்க தடை விதிக்க வேண்டும் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி & நீதிபதி பிடி ஆடிகேசவலு தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, இது மிக மோசமான நடவடிக்கை. மனுதாரரின் தப்பெண்ணம் இதில் புலப்படுகிறது என்று மனுதாரரை காட்டமாக விமர்சித்தார்.
மேலும், ஒருவர் மதத்தை கடைப்பிடிக்கும் போது தப்பெண்ணத்தையும் பழிவாங்கும் முறையையும் அகற்ற வேண்டும் என்று கூறியதுடன், எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை. பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல கூறியதுடன், நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. நமது நாட்டின் அரசியலமைப்பு கூட கடவுள் அல்லது அரசியலமைப்பின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்கிறது என கருத்துதெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.