மும்பை; என்னால்தான், என் உறவினர் என்பதால்தான், ஊழல் புகாரில் சரத்பவாரின் பெயரை சேர்த்து அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று உணர்ச்சி வயத்துடன் கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார்.
மராட்டிய சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில கூட்டுறவு வங்கியில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் சரத்பவாரின் பெயரை இழுத்துவிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த வழக்கில் சரத்பவாரின் உறவினர் அஜித் பவார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “எங்கள் கட்சியின் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதனால் தலைவர்களின் மனதைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
மராட்டிய கூட்டுறவு வங்கி நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்புத் தொகையே ரூ.11000 கோடிகள் எனும்போது, அங்கே எப்படி ரூ.25000 கோடிகளுக்கு ஊழல் நடந்திருக்க முடியும்? அந்த வங்கி ஒரு உச்சபட்ச அமைப்பாகும். நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு சில சமயங்களில் விதிமுறைகளை மீறி உதவியிருக்கலாம்.
அந்த வங்கியின் தலைவராக சரத்பவார் எப்போதும் இருந்ததில்லை. தேர்தல் நேரத்தில் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.