மும்பை:
சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
‘கை போ சே’, ‘ஷுத் தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அவரது உடலை உடற்கூர் ஆய்வு செய்வதற்காக நேற்று மதியம் டாக்டர் என்.ஆர். கூபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்தபின், அறிக்கை பாந்த்ரா காவல்துறை அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், சுசாந்த் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையின் படி அவர் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தியது. இருப்பினும் சுசாந்த் சிங் இறப்பு தற்கொலை? அல்லது கொலையா? என்று தெரிய படுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் சிபிஐ கண்டுபிடித்த உண்மைகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.