ஒயிட் ஃபீல்டு, கர்நாடகா
வருமான வரி சோதனையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வில்லா பங்களாவை ரூ.1.6 கோடிக்கு வாங்கி உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஒயிட்ஃபீல்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் சமீபத்தில் ஒரு வில்லா பங்களாவை ஒயிட்ஃபீல்டில் உள்ள ஜடி துவாரகாதாஸ் வில்லாஸ் என்னும் இடத்தில் வாங்கி உள்ளார். இதை அவர் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த வில்லா ரொக்கப்பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதை ஒட்டி வருமான வரித்துறையினர் சுப்ரமணி வீட்டை சந்தேகத்தில் சோதனை இட்டனர். அந்த சோதனையில் சுப்ரமணி அந்த வில்லாவை தனது பெயரில் ரொக்கப் பணம் கொடுத்து வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனரிடம் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் இருக்க வாய்ப்பு இல்லாததால் இது பினாமி சொத்து என்னும் கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் இவருக்கு பல அரசியல் வாதிகள் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் யாரென்பதை கண்டறிய மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பினாமி சட்டம் 1988 இன் கீழ் சுப்ரமணி மீது வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஒரு சில ஊடகங்கள் இந்த பகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான அரவிந்த் லிம்பாவலிக்கும் சுப்ரமணியின் வில்லா இல்லத்துக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியிட்டன.
இதை அரவிந்த் மறுத்துள்ளார். அவர், “எனக்கும் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் இருவரும் கலந்துக் கொண்டோம். அதற்காக என்னை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது.
எனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை நான் லோக் ஆயுக்தாவில் ஒவ்வொரு வருடமும் அளித்து வருகிறேன். இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை நியாயமான விசாரணை நடத்த வேண்டும் ” என கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]