டில்லி
வரிச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இணையம் மூலம் முகமற்ற வருமான வரித்தணிக்கையை வருமான வரித்துறை அமல்படுத்தி உள்ளது.
தற்போது வருமான வரித்தணிக்கையின் போது ஏற்படும் சந்தேகங்களை வருமான வரி அதிகாரிகள் வரி செலுத்துவோரிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கமாகும். இதன் மூலம் பல நேரங்களில் முறைகேடு நிகழ்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதை ஏற்கனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அத்துடன் இதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடந்த ஜூலை மாதம் நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் தெரிவித்தார்.
அதன்படி கடந்த திங்கள் முதல் மின்னணு வருமான வரித்தணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இம்முறையில் அதிகாரிகள் மற்றும் வரி செலுத்துவோர் சந்திக்கத் தேவை இல்லை என்பதால் இது முகமற்ற வருமான வரித்தணிக்கை என அழைக்கப்படுகிறது. கடந்த திங்கள் அன்று வருமானத்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 58,322 கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை முதலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைப்பதாக இருந்தது. அவருக்கு அலுவல்கள் அதிகமாக இருந்ததால் அவரால் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு மையங்களில் முகமற்ற தணிக்கை நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தில் உள்ள கணக்குகளில் உள்ள சந்தேகங்கள் குறித்து வரி செலுத்துவோரிடம் இ மெயில் மூலம் விளக்கங்கள் கேட்கப்படும். அவர்களும் அந்த விளக்கம் மற்றும் சான்றுகளை இ மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் விரைவாகவும் எளிதாகவும் தணிக்கை முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.