பெங்களூரு
வருமான வரித்துறை நடத்திய 46 சோதனைகளில் 39 சோதனைகள் காங்கிரஸ் – மஜத கட்சியினரிடம் நடத்தப்பட்டுள்ளன.
வருமான வரித்துறையினர் தேர்தல் நேரங்களில் பல இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இது சாதாரணமாக நடப்பது என தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சோதனைகள் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை தடுக்க நடத்தப்படும் சோதனைகள் என காரணம் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த சோதனைகள் பெரும்பாலும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு எதிராகவே நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
உதாரணமாக கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்றது. அப்போது பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டி இட்டன. அப்போது நடந்த 34 சோதனைகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினரிடம் நடந்தது.
தற்போதைய மக்களவை தேர்தல் நேரத்தில் 46 வருமான வரி சோதனை நடந்தன. அவற்றில் 39 சோதனைகள் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினரிடம் நடந்துள்ளன. இந்த 39 வருமான வரிச் சோதனைகளில் 22 மஜத கட்சியினரிடமும் 17 காங்கிரஸ் கட்சியினரிடமும் நடந்துள்ளன.
இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, “இது அரசியல் பழிவாங்கல் ஆகும். இதை எதிர்த்து நான், சித்தராமையா, தினேஷ் குண்டு ராவ், பரமேஸ்வரா ஆகியோர் வருமானவரித்துறை அலுவல்காம் முன்பு போராட்டம் நடத்தி உள்ளோம். எங்கள் போராட்டம் சரியானது என்பதை இந்த விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன” என தெரிவித்துள்ளார்.