கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை யினருடன் இணைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்களைத் தொடர்ந்து, அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள் என பல இடங்களில் ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று, வேலுமணியின் நண்பரும், கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருக்கும் சந்திரசேகர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்திலும் சோதனை நடந்தது. நேற்றைய சோதனையின்போது, சந்திரசேகர் வீட்டில் இல்லை. இருந்தாலும், அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டதுடன், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களையும் கைப்பற்றினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனையானது 12 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு முடிந்தது.
இதே வேளையில் மற்றொரு குழு, சந்திரசேகருக்கு சொந்தமான நிறுவனமான கே.சி.பி. நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இங்கு 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய அந்த அலுவலகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் கோவையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]