சென்னை: இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இம்முறை மகளுருக்கென பிரத்யேகமாக நடைபெறுகிறது. இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று தொடங்கும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளை அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நேரில் பார்க்கலாம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது சர்வதேச பெண்கள் ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டியில், உலகின் 25 நாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்த ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த டென்னிஸ் போட்டிகளை காண ரூ.100 முதல் ரூ.450 வரை கட்டணங்கள் நிர்ண யிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ” தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து, இந்த “சென்னை ஓப்பன் (WTA) 250” போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்த ரூ.5 கோடியும், இங்குள்ள விளக்குகளை புதிதாக மாற்றி அமைப்பதற்காக ரூ.3 கோடியும், இந்த விளையாட்டு அரங்கை புதுப்பிப்பதற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் அனைத்து பணிகளும் நூறு சதவீதம் நிறைவுற்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டஉள்ளது.
இந்த போட்டிகள் 12ந்தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் உலகில் உள்ள பல நாடுகள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்ய தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.குறிப்பாக சென்னையில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த போட்டிகளை பார்வையிட உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிகளை கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் உதகை, தமிழ்நாட்டில் இந்த 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு அகாடமிக்கும் என்னென்ன தேவை என்பது குறித்தும், அகாடமி அமையவுள்ள அந்த பகுதி சார்ந்த விளையாட்டுகள் மட்டும் தேர்வு செய்து அந்த பகுதியில் விளையாட்டு அரங்கத்தை உருவாக்குவதுதான் நோக்கம். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.
2017ம் ஆண்டிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக போட்டிகள் ஏதுமின்றி பராமரிப்பின்றி கிடந்த நுங்கம்பாக்கம் சர்வதேச டென்னிஸ் மைதானத்தை ஐந்து கோடி ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய இருக்கைகள், மின் விளக்குகள் பொருத்துதல் என 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து சர்வதேச வீரர்களை வரவேற்க மைதானம் தயாராக உள்ளது.
இன்று தொடங்கும் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் திருவிழாவில் கலந்துகொள்ள இரண்டு இந்திய வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை பிரதான போட்டிகள் மகளிர் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். பொதுமக்களுக்கு 100 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் விளையாடும் 32 வீராங்கனைகளில் 22 பேர் நேரடியாக தரவரிசையின் அடிப்படையில் தகுதி பெற்றனர். நான்கு வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய அளவில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீராங்கனைகளான சாய் சம்ஹிதா மற்றும் லட்சுமி பிரபா என இரண்டு பேர் தகுதி சுற்றில் பங்கேற்றனர்.
இந்த தொடரின் தலைசிறந்த வீராங்கனையாக தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையும் விஜய் அமிர்தராஜின் மருமகளுமான அலிசன் அமிர்தராஜ் களமிறங்குகிறார். சென்னை ஓபன் தொடரில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு சர்வதேச அளவில் 250 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த தொடரில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.