சென்னை: தமிழகத்தில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியான ரூ.4 ஆயிரத்தில், முதல்கட்டமாக வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி, தொடங்கி வைக்கிறார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என வாக்குளித்து அளித்தார். அதைத்தொடர்ந்து, முதல்வராக பதவி ஏற்றதும், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை ரூ.4ஆயிரம் வழங்கப்படும என்றும் முதல் தவணையாக 2 ஆயிரம் 10ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இன்று முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, வருகிற 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை விநியோகிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக ரேசன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதால், உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 200 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
விநியோகிக்கப்படும் டோக்கனில் ரேஷன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், நிவாரண நிதி வழங்கும் தேதி மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டோகன்களில் எந்தவித கட்சி சின்னமும் இன்றி, தமிழக அரசின் லோகோ மட்டுமே இடம்‘பெற்றுள்ளது. மது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டோக்கன் பெற்றவர்கள்,15ம் தேதி முதல் குறிப்பிட்ட நாட்களில், ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.