சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே, 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ (TIDCO) வெளியிட்டுள்ளது.
இந்தியா தற்போது விண்வெளித்துறையிலும் சாதனைகள் பல செய்து வருகிறது. விண்வெளிக்கு அனுப்புவதற்கான ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளி துறையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உலக நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தீவிரமாக ஆஈடம ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோவின் முக்கிய இடமான விண்வெளி ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது. மேலும், பெங்களூரு உள்பட பல மாநிலங்களில், இஸ்ரோவின் கிளைகள் உள்ளன. அதன்மூலம் ராக்கெட்டுகளுக்கு தேவையான பாகங்கள் மற்றும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தி சாதனைகளை படைத்துள்ள இஸ்ரோ, சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் எனப்படும் கடற்கரை பகுதியை தேர்வு செய்தது.
இங்கிருந்து, எஸ்.எஸ்.எல்.வி., எனப் படும், சிறிய ராக்கெட் உதவியுடன் மிகச்சிறிய, சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்காக , துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரோவின் 2வது விண்வெளி ஏவுதளமாக அமைய உள்ள குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர் மற்றும் அதை சுற்றிய இடங்களில், 2,300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2019 டிசம்பரில் விண்வெளிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு தொடங்கியது. விண்வெளி நிலையத்தை அமைப்பதற்காக மாதவன்குறிச்சி, படுகாபத்து மற்றும் பள்ளக்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி 2024ம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி அன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து சிறிய ரக ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான, ‘டிட்கோ’ குலசேகரன்பட்டினம் அருகே, 3,500 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், விண்வெளி தொழில் பூங்கா மற்றும் ராக்கெட் எரிபொருள் தொழில் பூங்கா அமைக்க உள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே தமிழக அரசிடம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட்(Tidco) அதிகாரப்பூர்வமாக இன்று ( 17-05-24 வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU with ISRO’s INSPACE) கையெழுத்திட்டுள்ளது.
விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பு உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டின் விண்வெளி துறையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என டிட்கோ தெரிவித்துள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையம் திறக்கப்பட்ட உடன் தமிழ்நாட்டை விண்வெளி விரிகுடாவாக மாற்றுவதற்கு ‘விண்வெளி பூங்கா திட்டம்’ உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.