சென்னை

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானியின்  மகனின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் ஐஐடி வளாகம் உள்ளது.  இங்குள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.  அங்கு விரைண்ட காவல்துறை அதிகாரிகள் அந்த சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் இறந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  உன்னி கிருஷ்ணன் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும், வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளைச் செய்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

காவல்துறை அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அறையில், “நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பிடெக் பட்டம் பெற்ற உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  அவர் ஒரு. சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்று , தீயிட்டுக் கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர், உன்னி கிருஷ்ணனுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.