ஸ்ரீஹரிகோட்டா: 3 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் 14 சர்வதேச செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.
விண்வெளித்துறையில், அண்மைக்காலமாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது இஸ்ரோ. உலக நாடுகள் பலவும் இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனைகளை கண்டு வியந்து வருகின்றனர்.
இந் நிலையில், நடப்பாண்டு முடிவதற்குள் பிஎஸ்எல்வி சி47, சி48 மற்றும் சி49 ஆகிய 3 ராக்கெட்டுகள் மூலம், 14 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. அதில் கவனிக்கத்தக்க ஒன்று, 14 செயற்கை கோள்களும் 4 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பது தான்.
அவை அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் நிலையத்தில் இருந்து வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள் அனுப்பப்படும். அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ்பிளைட் என்ற நிறுவனம் இது போன்ற திட்டங்களை, ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்துடன் ஏற்கனவே பல கட்டங்களில் ஒன்றிணைந்து, செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கிறது. இது குறித்து ஸ்பேஸ்பிளைட் நிறுவன செயல் இயக்குநர் கர்ட் பிளாக் கூறியிருப்பதாவது:
பிஎஸ்எல்வியானது எங்களுக்கு நம்பகமான ஒன்றாக இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தி இருக்கிறோம்.
மொத்தத்தில், பிஎஸ்எல்வி 300 வெளிநாட்டு (1 கிலோ கிராம் முதல் 100 கிலோ கிராம்) செயற்கை கோள்களை பல வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக பூமியின் சுற்றுப்பாதைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். உலகளவில் செயற்கை கோள்களை ஏவ போதிய வசதிகள் இல்லை என்றார்.