ஹமாஸ் படையினருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை சுற்றிவளைத்துள்ளது.
இதனால் யாரும் அந்த மருத்துவமனைகளை விட்டு வெளியேறவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாது என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவிற்குள்ளான பாலஸ்தீன பிரதேசத்திற்குள் இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தோனேசிய மருத்துவமனை மற்றும் அல்-அவ்தா மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் சுற்றிவளைக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
காசாவில் மொத்தமுள்ள 36 மருத்துவமனைகளில் 20 மட்டுமே தற்போது இயங்கி வரும் நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களுக்கான மருத்துவ உதவிகளுக்கு இவை போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சுகாதார வசதிகள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள சுகாதார அமைப்புகள் செயலிழக்கும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
தொடர்ச்சியான குண்டுவெடிப்பால் மருத்துவ விநியோகம் தடைபட்டுள்ளதை அடுத்து ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்கள் அதிகரித்து வருவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காசா மீது கடந்த 19 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில் சுகாதார நிலையங்கள் மீது சுமார் 700க்கும் தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும் வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள் “முற்றிலும் மூடப்படும் அபாயத்தில் உள்ளன” என்று WHO தெரிவித்துள்ளது.