லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதனை தெரிவித்த நெதன்யாகு லெபனான் மீதான இந்த தாக்குதல் தாக்குதல் தனது ஒப்புதலுடனேயே நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தவிர, பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தனது ஒப்புதலுடனேயே நடைபெற்றதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்த தகவலை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்துள்ளார்.
லெபனானில் நடந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர், 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று லெபனான் கூறிவந்த நிலையில் இதுவரை மௌனம் காத்துவந்த இஸ்ரேல் நேற்று முதல்முறையாக இதனை ஒப்புக்கொண்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் எதிர்ப்பை மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவருடன் இதுவரை 3 முறை பேசியதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.