இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த குண்டு மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல் ஓராண்டாக காசாவை கைப்பற்ற துடித்து வருகிறது.

ஹமாஸ் படையினருக்கு உதவியாக லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இயங்கி வந்த நிலையில் தனது தாக்குதலை லெபனான் மீது திருப்பியது இஸ்ரேல்.

ஹிஸ்புல்லா அமைப்பின் பேஜர் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கடந்த வாரம் குண்டு வைத்து தகர்த்த இஸ்ரேல் அதன் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா-வை படுகொலை செய்தது.

இதனைத் தொடர்ந்து லெபனான் மீது முழு அளவிலான தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் இதன்மூலம் லெபனானை கைப்பற்றி காசா பிரச்சனைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் முடிவு கட்ட நினைத்தது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குதல் மற்றும் லெபனான் மீதான தரைவழி தாக்குதலை ஈரான் மீதான தாக்குதலாக கருதிய நிலையில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இஸ்ரேல் மற்றும் லெபனான் விவகாரம் குறித்து விவாதித்ததாகக் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.