டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர கால சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன், ரயில்வே வாரியத் தலைவர், அனைத்து மண்டல, கோட்ட ரயில்வே பொது மேலாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழியாக ரயில்வே அமைச்சகம் இதனை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ரயில்வே பெட்டிகள் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.