காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதும், தாலிபான்களின் ஆட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அதையடுத்து ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது ஆட்சியை நடத்தி வருகின்றனர். பழமைவாதிகளாக தாலிபான்கள், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், தங்களது மூர்க்க குணத்தையும் காட்டத் தொடங்கி உள்ளனர். இனால், ஆப்கனில் மீண்டும் வன்முறைகள், வெறியாட்டங்கள் தொடங்கி உள்ளன. மேலும், முஸ்லிம் இனத்தவர்களிடையேயும் மோதல் ஏற்பட்டு வருகின்றன. இங்கு சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது, சன்னி பிரிவினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம்.

இந்த  நிலையில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் உள்ள மசூதியில்  நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சிறப்புத் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்த அடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.

இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளதாகவும் 143 பேர்  காயமடைந்துள்ளதாகவும்,  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதிதான், உடலில் வெடிகுண்டுடன் வந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது.