அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில், 3 காவல்துறை அதிகாரிகளை, சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
குஜராத்தில், கடந்த 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே, இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் உள்பட, நான்கு பேர், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்லும் சதித்திட்டத்துடன் வந்ததாக காவல்துறையினர் கூறினர்.
ஆனால், அவர்களை போலி என்கவுன்டர் நடத்தி, காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக, அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இஷ்ரத் உட்பட நான்கு பேரும், போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றப்பத்திரிகை மீது, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்ப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் ஜி.எல்.சிங்கால், தருண் பரோட், அனஞ்ஜு சவுத்ரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி, மூன்று காவல்துறை அதிகாரிகளும், அகமதாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி வி.ஆர். ரவால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது; மூன்று காவல்துறையினரும் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது சிபிஐ அமைப்பும் எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை. எனவே, அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.