டில்லி

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேற உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது பல பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு பெரிதும் ஆதரவு அளிக்கின்றனர். இதனால் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கருதினர். அதை ஒட்டி மத்திய அரசுக்கு வியாபாரிகள் தங்கள் வர்த்தகம் ஆன்லைன் வர்த்தகத்தால் கடுமையாக பாதிப்பு அடைவதாக கோரிக்கை விடுத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டு சில்லறை வர்த்தகரகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நேரடி முதலீட்டுக் கொள்கையில் சில திருத்தங்களை அறிவித்தது. அந்த திருத்தங்கள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தங்களின்படி அன்னிய முதலீட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்த வர்த்தக நிறுவனப் பொருட்களை விற்க முடியாது. அத்துடன் குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே ஒரு பொருளை விற்க முடியாது.

இது குறித்து வரத்தக ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் புதிய நடைமுறையால் ஃப்ளிப்கார்ட் தன்னிடம் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களில் 25% பொருட்களை நீக்கி விட்டது. இது வால்மார்ட் நிறுவனத்துக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை ரூ.1,77,000 கோடிக்கு வாங்கிய அந்நிறுவனம் எதிர்பார்ப்பு வீணாகி உள்ளது.

இனி ஃப்ளிப்கார்ட் மூலம் லாபத்தை ஈட்ட முடியாத நிலையில் வால்மார்ட் உள்ளது. ஆகவே வால்மார்ட் நிறுவனம் இந்திய முதலீட்டை திரும்பப் பெற அதிக வாய்ப்புள்ளது. இனி லாபத்தில் இயங்க முடியாத காரணத்தால் வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து விரைவில் வெளியேற வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.