டில்லி

ற்போது தொலைத் தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரித்து வருவதால் வோடபோன் நிறுவனம் வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

பிரிட்டனைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு  இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கி வந்தது.  அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளாக தலா 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்து வருகிறது.

இந்நிறுவனம் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு கட்டணத்தில் 28 ஆயிரத்து 306 கோடி ரூபாயை நிலுவையாக வைத்துள்ளது.  ஜியோ நிறுவன வருகையால் நட்டத்தை எதிர்கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான நிதி சூழலால் வோடபோன் நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி வோடபோன் நிறுவனம் தனது இந்தியச் சேவையை நிறுத்தி கொண்டு நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என தொலைத்தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வோடபோன் – ஐடியா செய்தி தொடர்பாளர்களுக்கும் அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழு தலைவர் பென் படோகன் ஆகியோரை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு வோடபோன் – ஐடியா நிறுவனம் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.