சென்னை: அண்ணா பல்கலை  மாணவி வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த  பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

 இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா என்றும், இது என்ன குற்றச்சாட்டு என்று அண்ணாமலைக்கு தெரியுமா? என்றும் மா சுப்பிரமணியன் எதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.  “அன்றைய தினம் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார்.

யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்? டிச.24-ம் தேதி 2 காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டூர் சண்முகம், இவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” அண்ணாமலை  கூறியிருந்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. யார் அந்த சார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  இன்றைக்கு அண்ணாமலை சொல்லியிருப்பதை நானும் கூட பார்த்தேன். அவர் என் மீது என்ன கூறியிருக்கிறார் என்றால், சண்முகம் என்ற வட்ட செயலாளார் எனக்கு போன் செய்தார் என்று கூறியிருக்கிறார்.

இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா?. என் தலைமையில் இருக்கின்ற நிர்வாகத்தில் 82 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள்.   ஒவ்வொரு நாளைக்கும் 10 முதல் 15 பேர் எனக்கு போன் செய்வார்கள். இந்த தேதி, இந்த நாளில் எனக்கு மாவட்ட செயலாளர் போன் செய்தார். அதனால் என்னை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்காவது இது என்ன குற்றச்சாட்டு என்று தெரியுமா?.. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அண்ணாமலை அந்த வீடியோவில் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு பொறுப்புகள், 2 பதவிகள் இருக்கிறது. கோட்டூர் சண்முகமும் மா சுப்பிரமணியனும் தினமும் பேசுகிறார்களா.. தினமும் பேசுகிறார்கள் என்றால்.. நான் சொன்ன கடந்த 24 ஆம் தேதி மா சுப்பிரமணியனும் சண்முகமும் இரண்டு முறை பேசுகிறார்கள். அதன்பிறகு 6 நாட்கள் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. இவங்க டீல் பேசுகிற ஆள் இல்லவே இல்லை.. 24 ஆம் தேதி பேசிய பிறகு அவர்கள் திரும்ப பேசியிருக்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் பேசவில்லை. 6 நாட்கள் அவர்கள் பேசவில்லை. 24 ஆம் தேதி பல விஷயங்கள் நடந்திருக்கு. அங்க தான் யார் அந்த சார் ஒளிஞ்சி இருக்காங்க.. நான் எதற்கும் பயப்பட போவது கிடையாது. ஒரு விஷயத்தை சொன்னேன்.. அதனை கையில் எடுத்து இருக்கிறேன். உடும்பு பிடியாக பிடித்து கடைசி வரை போவேன்..

நான் சாட்டையால் அடித்துக்கொண்டது, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் சகோதரனாக தான்.. எனவே தொடர்ந்து கேள்வி கேட்பேன்.. இந்த இடம் என்று பக்காவாக பிளான் செய்து அவர் அங்கு ஸ்கெட்ச் போட்டு செய்கிறார். அவர் மட்டும் தான் குற்றவாளியா? எனவே கேள்விகள் தொடரும்? காவல்துறையின் கையை யார் கட்டிப்போட்டனர்? என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லாத நாளே இல்லை. ஆதாரம் இருந்தால் அவர் வெளியிடலாம். நீதிமன்றத்தை அணுகலாம். எங்களுக்கு பயம் இல்லை. எது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

ஞானசேகரன் வழக்கு: விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு! வீடியோ