நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது. ஐந்து மாநிலங்களில் ரதயாத்திரை முடிந்து இன்று கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டத்துக்குள் நுழைகிறது.
இந்த ரதயாத்திரை மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் உடையது என்றும் தெரிவித்து, தமிழகத்துக்குள் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்றும் பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல இன்று நெல்லையில், ரதயாத்திரையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டம் நடத்தப்போவதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் காவல்துறையிடமிருந்து வெளியாகவில்லை.