விருதுநகர்: காவல்துறை உங்கள் நண்பர் என்று பல ஆண்டுகளாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், ஒரு இடத்தில் நடைபெற்ற சிறு சம்பவத்துக்காக, “காவலர் அனைவரும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” அப்போதுதான் மக்கள் பயப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போத, இளைஞர் ஒருவரை தலையைபிடித்து இழுத்து தாக்கிய பெண் டி.எஸ்.பியை போராட்டக்காரர்கள் எதிர்த்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பெண் போலீசாரை தாக்கிய நபர்கள் என 7 பேரை கைது செய்து அவர்கள்மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளது.
போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தை மூலம் தடுக்க வேண்டிய காவல்துறை பெண் அதிகாரி, அத்துமீறி போராடிய நபர்மீது கைவைத்ததே இந்த பிரச்சினைக்கு காரணமாக கூறப்படுகிறது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை மேலும் பெரிதாக்கி தற்போது, போராட்டக்காரர்கள்மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள நடவடிக்கையும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு வழங்கிய அறிவுரையில், இன்று முதல் இந்த நொடியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்புப் பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் யாரையாவது பணியில் பார்த்தால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படும். பிரச்சனை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லத்தியோடு பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
குறிப்பாக அடிதடி போன்ற இடங்களில் வாயில் பேசிக் கொண்டிருந்தால் சரியாகவே இருக்காது கையில் லத்தி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பீட் போலீஸ், பந்தோபஸ்த் போலீஸ், பணியில் இருக்கும் எல்லா போலீஸும் நான் பார்க்கும்போது கையில் லத்தி இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும் ஆகையால் அனைத்து டிஎஸ்பியும் ரோல் காலில் கட்டாயம் லத்திக் கொண்டு வருவதற்குப் போலீஸை அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். போலீஸ் அதிகாரியின் இந்த பேச்சு இணையதளங்களில் பேசும்பொருளாக மாறி வருகிறது.
ஏற்கனவே சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நபர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், தற்போது பொங்கி எழுவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், காவல்துறை உங்கள் நண்பர் என காவல்துறை அதிகாரிகள் கூறி வரும் நிலையில், பல காவல்துறையினரே முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதும், அப்பாவிகளை பிடித்து வழக்குகளை போடுவதும், மாத இறுதியில் வாகனத்தில் செல்வோரை மடக்கி தேவையான காரணங்களை கூறி அபராதம் வசூலிப்பதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுக வேண்டும் என்றும், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், காவல்துறை பொதுமக்களின் நண்பன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போதைய தமிழக காவல்துறையினர் முதல்வரின் உத்தரவின்படிதான் நண்பனாக செயல்டுகிறார்களே என்பது கேள்விக்குறியே.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒவ்வொரு காவலரும் கையில் லத்தியுடன்தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருப்பது, காவல்துறை என்றால் மக்கள் பயன்பட வேண்டும் எண்ணத்தை உருவாக்க நினைக்கிறாரா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என கூறினாலும், பெரும்பாலான காவல்துறை யினர், போலீஸ் என்ற இருமாறுப்புடன்தான் செயல்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை நிலவரம்.
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக காவல்துறை, சமீப காலமாக ஆட்சியாளர்களின் அடிமைப்போல செயல்பட்டு வருகிறது. எதிர்த்து பேசினாலே குண்டாஸ் என மிரட்டி வருவதும் அனைவரும் அறிந்ததே. வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று இரு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. அதுபோல அதிகரித்து வரும் போதை பொருட்கள் நடமாட்டம், கொலை கொள்ளை சம்பவங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது. தமிழ்நாடு காவல்துறையினரின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல முறை என பல தரப்பிலும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், தற்போது காவல்துறையினர், பொதுமக்களை லத்தியை வைத்து மிரட்ட வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பேசியிருப்பது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
லத்தி சார்ஜ் அல்லது காவல்துறையின் பலத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் சட்டப் புத்தகங்களில் இடமில்லை. ஆயினும்கூட, இந்த நுட்பம் பொதுவாக காவல்துறையினரால் பின்பற்றப்படுகிறது. லத்தி சார்ஜ் பயன்படுத்த அனுமதிக்கும் சில விதிகளும் உள்ளது. ஆனால் அது சில விதிவிலக்குகளில் தொடர்ந்து உள்ளது. CrPC இன் பிரிவு 144 இன் படி, சட்டவிரோத கூட்டம் கலைக்க மறுக்கும்போது மட்டுமே காவல்துறை லத்தியைக் கொண்டு பலத்தை பயன்படுத்த முடியும்.
காவல்துறையினரின் அத்துமீறிய செயல்களும், பொதுமக்களிடம் சிடுசிறுப்புடன் நடந்துகொள்வதற்கும், பொதுமக்களை மரியாதையின்றி வாடா, போடா என வயது வித்தியாசமின்றி பேசுவதற்கும், அத்துமீறி செயல்படுவதற்கும், அரசியல்வாதிகளுக்கு கூழைகும்பிடு போடுவதற்கு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையே காரணம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம், வேலைப் பளு, மன அழுத்தம் என கூறப்பட்டது. அதுபோல, காவல்துறையினரை சுதந்திரமாக பணி செய்ய ஆட்சியாளர்கள் விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. எங்கள் பணியில் யாரும் தலையிட முடியாது என்ற ஒரு நிலை வந்தால், நிச்சயமாக தமிழக காவல்துறைதான் உலகின் மிகச் சிறந்த காவல் துறையாக இருக்கும்’ என்று பல காவல்துறை அதிகாரிகள் கூறியதுடன், தவறு செய்தவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே வண்டு முருகன் வந்து நிற்கும்போது என்ன செய்ய முடியும்? எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் சரி, கலவரமாக இருந்தாலும் சரி, பிரச்னை முடியும்போது காவலர்கள் மீது பழியைச் சொல்லி பிரச்னை முடித்து வைக்கப்படுவதை பார்க்கிறோம், இதுபோன்ற காரணங்களால்தான் காவல்துறையினர் சில நேரங்களில் அத்துமீறி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறுகிறது. நேற்றைய ஆளுங்கட்சி தற்போது, ‘போலீஸ் அராஜகம் ஒழிக’, என்று கோஷமிடுகிறது. காவல் துறையை எப்படி வேண்டுமானாலும் சாடலாம், நக்கல், நையாண்டி செய்யலாம். அவர்கள் பதில் சொல்ல முடியாது. அவர்களுக்கென்று தொழிற்சங்கம் கிடையாது. காவல்துறைக்கு எதிராக யாராவது ஒரு கருத்தை சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்கவோ, ஆமோதிக்கவோ காவல்துறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர் தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.
காவல்துறையின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. அதை சரி செய்ய ஆளும் அரசு முன்வர வேண்டும். ஆனால் ஆளும் அரசு நல்லாட்சி என்பதை உதட்டளவில் மட்டுமே பார்க்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறை அவர்களுக்கு இல்லாமல் போனதுதான் சமீப காலமாக, ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் அதிகாரிகள் தேர்தல் அரசியலுக்கு வருகிறார்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் அந்த அரசியல் கட்சிக்கு அவர்கள் அதிகாரப் பொறுப்பில் இருக்கும் போது செய்த சலுகைக்கு சன்மானம் தான் இந்த தேர்தல் வாய்ப்பு என்பது தான் உண்மை.
இப்போது கூட தமிழக காவல்துறையில் அதிமுக ஆதரவு திமுக ஆதரவு என்று ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பிரிவாக பிரிந்து தான் இருக்கிறார்கள் அதிமுக ஆதரவு ஐபிஎஸ் அதிகாரிகள் திமுக ஆட்சியில் ஒதுக்கப்படுவது அதிமுக ஆட்சியில் திமுக ஆதரவு ஐபிஎஸ் அதிகாரிகள் ஓரங்கட்ட படுவது வழக்கமான ஒன்றுதான் இதுபோன்ற குளறுபடிகள் சரி செய்யப்பட்டால் தான் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் உண்மையாக இருக்கும்.
காவல்துறை மக்களின் நண்பனாக செயல்பட ஆட்சியாளர்கள், அவர்களை சுதந்திரமாகபணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினரின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.