ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வியெழுப்பியுள்ளார்.

தேசத் தந்தை காந்தி, பாலகங்காதர திலகர் உள்ளிட்ட பலரையும் சிறையில் அடைக்க உதவிய, இந்திய தண்டனை சட்ட பிரிவு 124ஏ இப்போது செல்லுபடியாகுமா என்று கேட்டு கர்நாடக முன்னாள் ராணுவ வீரர் எஸ்.ஜி. ஓம்பகட்டரே தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் இந்த கேள்வியை முன்வைத்தார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் மாற்றுக்கருத்தை கூறுபவர்கள் மீது இம்மாதிரியான அடக்குமுறை சட்டங்களை கொண்டு வழக்கு தொடுப்பது சமீப காலங்களில் அதிகரித்துப்பதை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

“இந்த சட்டப்பிரிவு மூலம் போடப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், அதை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது” என்று கூறிய தலைமை நீதிபதி “ரம்பத்தைக் கொண்டு மரத்தை அறுக்கலாமே ஒழிய காட்டை அழிக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறியதோடு, இந்த சட்டப் பிரிவு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களுக்கும் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், இந்த சட்டத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை, இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறும் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவித்தார்.