சென்னை:

ள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூறி வரும் கருத்துக்கள், திட்டமிட்டு தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமு.க தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சிப்பதாக திட்டமிட்டு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்; உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

இன்று சென்னை  கொளத்தூர் தொகுதியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் பயின்ற 128 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  அதிமுக அரசு முன்னர் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடுகளை வழங்காமல் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். தேர்தல் தேதியெல்லாம் அறிவித்தார்கள். ஆகவே உரிய ஒதுக்கீட்டுடன் தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். பாரதி வழக்குத் தொடர்ந்தார்.  தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இல்லை; முறையாக நடத்த வேண்டும். ஒதுக்கீடுகள் முறையாக இல்லை, அதை சரி செய்யுங்கள் என்று கோரித்தான் நீதிமன்றத்துக்கு சென்றோம்.

ஆனால், அதிமுகவோ, நாங்கள்தான் தேர்தலை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும்  பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை! தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்  உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம்,  அ.தி.மு.க. ஆட்சியில் நடத்த மாட்டார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு தோல்வி பயம்! அதனால் நடத்த மாட்டார்கள் … இதைத்தான் நாங்கள் பல முறை சொல்லியிருக்கிறோம்…

இப்போது, 4 மாவட்டங்கள் 9 ஆக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 5000 வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எப்படி பிரித்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தைதான் நாங்கள் எழுப்பி உள்ளோம்….

மேலும், உயர்நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில்  தேர்தல் நடத்தப்படுகிறதா என்பது குறித்து,மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் பேசினார்…  மற்றபடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று  நாங்கள் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

ஆனால், அதிமுக அமைச்சர்கள்,  திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான்,  திமுக மீது குற்றம் சாட்டி வருகிறது….  அதிமுக ஆட்சிதான் தேர்தலை நிறுத்த இதுபோன்ற சந்தேகங்களை கிளப்புகிறதோ என்பதுதான் எங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம் என்று கூறியவர், நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றார்.