டில்லி:
உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கா விட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும், டில்லியில் உள்ள பிரபல வழக்கறிஞர்க ளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி நடுவர் மன்ற மேல்முறையீடு வழக்கில், உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வெளியானது.
உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய பாரதியஜனதா அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கிடையில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், வருகிற 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப் படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக அனைத்து கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன் வராவிட்டால், மத்திய அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று காலை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தடையில்லை என்று கூறினார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, தமிழக அரசு சார்பாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த சென்றுள்ள தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், உள்பட தமிழக அரசு அதிகாரிகள், மற்றும் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, ராகேஷ் திரிவேதி ஆகியோர் டில்லியில் முகாமிட்டு சட்ட ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.