மாண்டியா

காவிரி நீர் திறப்புக்கு தானே காரணம் என மக்களவை உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான சுமலதா தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆணைய உத்தரவுப்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 9.19 டி எம் சி நீரும்,  ஜூலை மாதம் 31.2 டி எம் சி நீரும் திறந்து விட வேண்டி இருந்தது.  ஆனால் கர்நாடக  அரசு இந்த நீரைத் திறந்து விடாமல் இருந்தது.    காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது.  இந்த மழையால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

தற்போது கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் ஏராளமான நீர் வரத்து உள்ளதால் கர்நாடக அரசு இந்த இரு அணிகளில் இருந்தும் மொத்தமாக வினாடிக்கு 8100 அடி தண்ணீர் திறந்து விட்டது.    இதில்கபின் அணையில் இருந்து 3100 கன அடியும் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 5000 கன அடி நீரும் திறக்கப்பட்டது.

மாண்டியா தொகுதியின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான சுமலதா தாம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சவுகானிடம் தண்ணீர் திறந்து விட  வற்புறுத்தியதால் இந்த நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக முகநூலில் பதிவிட்டார்.  அத்துடன் தாம் மத்திய அமைச்சருக்கு இது குறித்து எழுதிய கடித நகலையும் அவர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்து விட்டிருக்கும் போது தாம் கூறியதால் திறக்கப்பட்டதாக  உள்ள சுமலதாவின்  பதிவு கர்நாடக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  குறிப்பாக மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சி நிர்வாகிகள் சுமலதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அரசின் செயலை தாம் செய்வதாக சுமலதா கூறிக் கொள்வது அபத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.