கட்டுரையாளர்: மருத்துவர். சந்திரலேகா, எம்.பி.பி.எஸ், எம்பிஏ மருத்துவமனை மேலாண்மை, (UK)
“கர்ப்பம்ன்னாலே டாக்டருக்கு ஜாக்பாட் தான் ! சும்மா சும்மா ஸ்கேன் செய்ய வெச்சே நல்லா கல்லா கட்டிடுறாங்க. நம்ம அம்மா, பாட்டி எல்லாம் எந்த ஸ்கேன் செஞ்சாங்க? நாமெல்லாம் நல்லா தானே இருக்கோம்?”. இது அன்றாடம் பல இடங்களில் கேட்கும் கோபக்குரல். இந்த ஆதங்கம் நியாயமானதா ?
கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சமாக மூன்று ஸ்கேன்கள் செய்ய மகப்பேறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
1. ‘டேட்டிங் ஸ்கேன்’: சிறுநீர்/இரத்த பரிசோதனையின் மூலம் கர்ப்பம் என்று அறிந்த 6-8 வாரங்களில் செய்யப்படும் முதல் ஸ்கேன். முத்துப்பிள்ளையாக இருந்தாலும் சிறுநீர்/இரத்த பரிசோதனையில் கர்ப்பம் என்றே காட்டும் என்பதால் உண்மையிலேயே கரு தானா? கர்ப்பப்பையில் சரியான இடத்தில் இருக்கிறதா? அல்லது கர்ப்பப்பை வாயிலிலோ (அப்படி இருந்தால் கூடுதல் கவனமும்,சில நேரம் சிசேரியனும் தேவைப்படலாம்) அல்லது சினைக்குழாயிலோ (உடனடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து) இருக்கிறதா என்று அறியவும், இதயத்துடிப்பு இருக்கிறதா என்று பார்க்கவும், கருவின் சரியான வயதைக் கணித்து அதன் மூலம் எந்த நாளில் பிரசவம் நடக்கும் என்று கணக்கிடவும் உதவும் ஸ்கேன் இது.
2. ‘நியூக்கல் ஸ்கேன்’: 11-14 வாரங்களில் செய்யப்படுவது. தலை, உடல், கை,கால்கள் உருப்பெற்றிருக்கும் காலம் என்பதால் அவற்றில் ஏதேனும் வளர்ச்சி குறைபாடுகள் இருந்தால் கண்டறிய உதவும். மேலும், மன/உடல் வளர்ச்சியை பாதிக்கும் ‘டவுன் சின்ட்ரோம்’ என்னும் மரபணு குறைபாடால் உண்டாகும் நோயைக் கண்டறியலாம்.
3.அனாமலி ஸ்கேன்: 18-23 வாரங்களில் செய்யப்படுவது. இந்த காலகட்டத்தில் மூளை, சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பெரிதாக வளர்ந்து இருக்கும் என்பதால் அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்று கண்டறிந்து அதற்கேற்ப மேற்கொண்டு வேறு பரிசோதனைகளோ, ஆலோசனைகளோ வழங்குவதற்கு உதவும். கர்ப்ப காலத்தில் வயிற்றில் ஏதேனும் அடிப்பட்டு விட்டால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று பார்க்கவும் ஸ்கேன் செய்யப்படும்.
எந்த பிரச்சினையும் இல்லாத கர்ப்பவதிகளுக்கு இந்த ஸ்கேன்கள் போதுமானது. கடும் இரத்த சோகை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள், போன பிரசவத்தில் சிக்கல்கள் இருந்தவர்கள் என்று ‘ஹை-ரிஸ்க்’ பெண்களுக்கு, குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க கூடுதல் ஸ்கேன்கள் தேவைப்படும்.
சமீபத்தில் மும்பையில், 21வயதான பெண் ஒருவரின் 24 வார கருவை (இந்திய சட்டப்படி 20 வாரம் வரை தான் கருக்கலைப்பு செய்ய முடியும்), மூளை வளர்ச்சியில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் கலைக்க நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கியது. கூலி வேலை செய்யும் கணவரின் வருமானத்தில் வாழ்நாளுக்கும் குறையுள்ள குழந்தையை வளர்க்க முடியாது என்று சரியான முடிவு எடுத்தவர், உரிய காலத்தில் ஸ்கேன் செய்து இருந்தால் நீதிமன்றம் வரை சென்று இருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது.
ஆக, கர்ப்பகால ஸ்கேன் என்பது வரும் முன் காக்கவும், ஆரோக்கியமான குழந்தை பெறவும் உதவும் அறிவியல் வழிமுறை. அதன் மூலம் தெரியவரும் விஷயங்கள் அடிப்படையில் நாம் கருக்கலைப்பு, கர்ப்பவதிக்கோ குழந்தைக்கோ அறுவை சிகிச்சை தேவைப்படுமெனில் அதற்கேற்ற மனம், பணம் தயார் செய்தல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். தாய் சேய் நலனிற்கான உணவு, வாழ்வியல் முறைகளைக் கையாள முடியும்.
கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது என்றாரே ஒளவையார். அந்த அரிதை எளிதாக்குவதே ஸ்கேன்களின் வேலை. தமிழ்நாட்டில், இந்த ஸ்கேன்கள், ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
எனவே, ஸ்கேன் என்பது மருத்துவரின் பணத்தாசை, பன்னாட்டு மருந்து கம்பெனி, இலுமிநாட்டி, ரோத்ஸ்சைல்ட் சதி என்று குழம்பி உங்கள் சைல்ட்டின் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ள வேண்டாம். ரீல் ‘அப்பா’க்களின் பேச்சை கேட்டு, அறிவியலை வெறுத்து, உடல், மன வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தையுடன் காலம் முழுவதும் பொருளாதார, மனச்சிக்கல்களுடன் வருத்தப்பட்டு பாரம் சுமப்பதற்கு பதில், ஸ்கேன் செய்து சிறப்பான சந்ததியுடன் ரியல் அப்பா-அம்மாவாக இனிதாக வாழுங்கள் !
ஸ்கேனிருக்க பயமேன் !