துபாய்: உள்நாட்டு அமைதியின்மையால் நெடுங்காலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், 11 கிறிஸ்தவர்களின் தலையை ஐஎஸ் பயங்கரவாதிகள் துண்டிப்பதாக குறிப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சிரியாவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மற்றும் அபுல் ஹசன் அல் முகாஜிர் ஆகியோர் கொல்லப்பட்டதாக வெளியாக தகவலையடுத்து, இந்தப் பழிவாங்கும் படலம் அரங்கேறியுள்ளதாக ஐஎஸ் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரிய நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட இந்த 11 கிறிஸ்தவர்களும், வரிசையாக இருக்க வைக்கப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் வெட்டப்பட்டும் மோசமான முறையில் கொல்லப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதேசமயம், இந்தக் கொலைகளை நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கண்டனம் செய்துள்ளார். “நைஜீரிய மக்கள் தங்களை மதத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளக்கூடாது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை எதிரெதிராக நிறுத்தக்கூடாது.
இந்த மோசமான கொலையாளிகள், முஸ்லீம் மதத்தையோ அல்லது சட்டத்தை மதிக்கும் உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லீம்களையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை” என்றுள்ளார்.