பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷரீக் என்பவர் கோவையில் சிம் கார்டு வாங்கி இருப்பதும், கோவையில் சில நாட்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பயணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் அடுப்பு போல் உள்ள பொருள் ஒன்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடிகுண்டு எடுத்து செல்லப்பட்ட போது வெடித்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்றும், பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிவதாகவும் அவர் அதிர்ச்சிகர தகவலை அவர் தெரிவித் துள்ளார். மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் இணைந்து கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ஆட்டோ குண்டு வெடிப்பில் காயமடைந்த ஷரீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூருவில் உள்ள ஃபாதர் முல்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கர்நாடக டிஜிபி தெரிவித்து உள்ளார்.
ஆட்டோவில் பயணித்த ஷரீக், வெடிகுண்டு அல்லது ஐஇடியை எடுத்துச் சென்றுள்ளது என்றும், வாகனத்திற்குள் பேட்டரிகள் பொருத்தப்பட்ட எரிந்த பிரஷர் குக்கர் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை, இது “கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட பயங்கரவாத செயல்” என்று போலீசார் உறுதிப்படுத்தினர். இது குறித்து கர்நாடகா போலீசார் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘‘ஷரீக் தனக்குச் சொந்தமில்லாத ஆதார் அட்டையை வைத்திருந்ததார். அட்டையின் உரிமையாளர் துமகுரு ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராகப் பணி புரியும், கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் ஹுதாகி என்பவர். இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, அவர் தனது கார்டை தொலைத்துவிட்டதாகவும், நகல் வாங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஷரீக், தனது பெயரில் இல்லாத சிம் கார்டை கோயம்புத்தூரில் இருந்து வாங்கியுள்ளார். அவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்திருப்பதை மொபைல் சிக்னல் காட்டுகின்றன. அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க, அவரது அழைப்பு பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருtதாக தெரிவித்துள்ள கர்நாடக காவல்துறையினர், சமீபத்திய கோயம்புத்தூர் குண்டுவெடிப்புடன் ஷரீக்குக்கு தொடர்பு இருக்க வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஷரீக் எதையோ குறிவைக்கத் திட்டமிட்டுள்ளார், ஆனால் நிறைவேறுவதற்குள் குண்டுவெடிப்பில் சிக்கிவிட்டார் என தெரிவித்து உள்ளனர்.
ஷரீக் மைசூருவில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ள மடஹள்ளியில் ஷரீக்கின் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். அந்த வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டனர். மொபைல் ரிப்பேர் பயிற்சிக்காக தங்கி இருப்பதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி, கடந்த மாதம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்ததாகவும், முதற்கட்ட விசாரணையில் அவருக்கு தீவிரவாத தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மங்களூருவில் ஆட்டோ வெடிப்பையடுத்து, சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் – கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.