சென்னை: கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும், இல்லையேல் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார்.

கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில், 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்காவை காண கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த பட்சம் ரூ.100 முதல் ஒவ்வொரு இடத்தை பார்வையிடவும் தனித்தனிக் கட்டணங்கள் மற்றும் ஒளிப்பதிவு கருவிகளுக்கு  ரூ.5000 என  கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது சாமானிய மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.

நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்:  அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவைய கத்தில் பல்வேறு வெளி நாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.

செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகத்தரத்துடன் திறக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” வை காண கட்டணம் எவ்வளவு…? முழு விவரம்