ஜபல்பூர்: தான் சொமாட்டோவில்(Zomato) ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்கு பணிக்கப்பட்ட நபர் இந்து அல்ல என்பதற்காக அந்த ஆர்டரை ரத்து செய்துள்ளார் ஒருவர். ஆனால், இந்த ரத்து நடவடிக்கைக்காக பணத்தை திரும்ப செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது சொமாட்டோ நிறுவனம்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் வசிக்கும் அமித் சுக்லா என்ற நபர், சொமாட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார். ஆனால், அவருக்கு டெலிவரி செய்ய பணிக்கப்பட்ட நபர் இந்து மதம் சாராதவர். இதனால், அந்த ஆர்டரை ரத்து செய்த சுக்லா, தனது பணத்தை திரும்பக் கேட்டார். வேறு டெலிவரி நபரை அனுப்ப முடியாது என்று அந்நிறுவனம் கூறிவிட்டதும் ஒரு காரணம்.
ஆனால், இத்தகைய காரணத்தின்பொருட்டு ஆர்டர் ரத்துசெய்யப்பட்டதால் பணத்தை திரும்ப செலுத்த முடியாது என்று கூறிவிட்டது சொமாட்டோ நிறுவனம். இணையப் பரபரப்பிற்காக இப்படி செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளது அந்த நிறுவனம்.
இந்த சிக்கல் குறித்து தனது வழக்கறிஞர்களிடம் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் சுக்லா.
“இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை அம்சத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள் வாடிக்கையாளர்களும் பலதரப்பட்டவர்களே. எங்கள் நிறுவனத்தின் நெறிமுறைக்கு பங்கம் ஏற்படுத்தும் வணிகத்தை இழப்பது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்றுள்ளார் சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்.