ஜாமியா துப்பாக்கிச் சூட்டைத்தான் அனுராக் தாக்குர் எதிர்பார்த்தாரா?: காங்கிரஸ் கண்டனம்

Must read

டில்லி

ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாஜகவுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா  பலகலைக்கழக மாணவர்கள் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் பேரணி ஒன்றை நடத்தினர்.  அந்த பேரணியில் திடீரென ஒருவர் புகுந்து மாணவர்களைப் பார்த்து “உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்”எனக் கூச்சலிட்டபடி துப்பாக்கியால் சுட்டார்.  இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் தேசத் துரோகிகள் எனவும் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த வேண்டும் எனவும் பேசினார்.  அதையொட்டி தேர்தல் ஆணையம் அவரது பிரசாரத்துக்கு மூன்று நாட்கள் தடை விதித்தது.

இந்நிலையில் மாணவர் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடந்தது குறித்து காங்கிரஸ் கட்சி டிவிட்டரில்,

”அமித் ஷா எத்தகைய காவல்துறையை நடத்துகிறார்.  அமைதிப் பேரணியில் புகுந்து ஒருவர் துப்பாக்கியால் சுடுவதை தடுக்காமல் டில்லி காவல்துறையினர் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதைத்தான் பாஜகவின் அனுராக் தாக்குர் போன்ற தலைவர்கள் எதிர்பார்க்கிறார்களா?  போராடும் இளைஞர்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடந்துள்ளது.”

எனப் பதிந்துள்ளது.

More articles

Latest article