டில்லி,

பிரபல சமூக வலைதளமான முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்க ஆதார் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியாவில் பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளது போன்று தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு தான் கோரினோம் என்று கூறி உள்ளது.

பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு மக்களிடையே சலசலப்பை உண்டு பண்ணியது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘இந்தியாவில் பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளது போன்று தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு தான் கோரினோம். மற்றபடி ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் எதையும் நாங்கள் கேட்கவில்லை.

பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்க விரும்புவர்களின் பெயரை சரியான முறையில் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் புரிந்து கொண்டு தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் தான், கேட்கப்பட்டது.

சோதனை அடிப்படையில், புதிதாக பேஸ்புக் கணக்கு தொடங்க விரும்புவர்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதுவும் இதனை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, பேஸ்புக் ஆதார் தகவல்களை திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிறிதும் உண்மையில்லை’’ என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.