17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா? என்று தி.மு.க. கூட்டிய மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13 மனித உயிர்கள் பலியாகி உள்ளன. முதலில் இந்த பலியான உயிர்கள் 13 தானா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி பலியானவர்கள் எண்ணிக்கை 30க்கு மேல் இருக்கும்.
துப்பாக்கிச்சூட்டிற்கு முதல் காரணம் உளவுத்துறை செயலிழந்து இருந்தது தான். தூத்துக்குடி போராட்டம் உடனடியாக தன்னெழுச்சியாக நடந்தது இல்லை. 99நாட்களாக நடந்த போராட்டம் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி ஒரு அமைதி பேரணியாக செல்வோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இதை ஒரு பொருட்டாக எடுக்காமல், எத்தனை பேர் போராட்டத்திற்கு வருவார்கள் என்று கூட கணிக்க முடியாத சூழ்நிலையால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அங்கு யாரும் கிடையாது. அமைதியாக பேரணியாக வந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை. இப்படி ஒரு திட்டமிட்ட படுகொலையை நடத்திவிட்டு முதல்வர் துப்பாக்கிச்சூடு நடந்ததே தெரியாது என்று கூறுகிறார்.
இத்தகைய திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டை இரண்டு நாட்களாக நடத்தி இளைஞர்களை இழுத்துச்சென்றார்கள். ஆனால் . யார் துப்பாக்கிச்சூட்டில் இறந்தது என்று முதல்வர் கேட்கிறார். பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்கிறார். 17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா?
இப்படி ஒரு திட்டமிட்ட படுகொலையை நிறைவேற்றியது காவல்துறை. அந்த காவல்துறையில் பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.பி, உளவுத்துறை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் இதற்கெல்லாம் முக்கிய காரணமாகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தங்கம் தென்னரசு கூறினார்.