சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை மீறி, பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்க, பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி, 2018ம் ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி சையது ரஹமத்துல்லா என்பவர் 2018ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு மனு அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் கடந்த விசாரணையின்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியர்கள் நியமனம் முடிவடைந்து விட்டதாகவும், இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விண்ணப்பதாரர் எவரும் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரரின் புகார் இதுநாள் வரை பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, 2018ம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகார் மனு மீது விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.