வஞ்சப்புகழ்ச்சி

கவிதை

பா.தேவிமயில் குமார்

 

சுனிதா வில்லியம்ஸ்
சூப்பர்  பெண்மணி !
 
கல்கத்தாக் காளியே
கண்கண்ட தெய்வம் !
 
வில்லியம் சகோதரிகளை
வெல்ல முடியுமா ?
 
மலாலாவைப் போல
மாணவி உண்டா ?
 
இந்திரா காந்தியே
இரும்புப் பெண்மணி ஆவார்
 
பி.வி. சிந்து
பின்னியெடுத்து விட்டார்
 
ஜீஜாபாயைப் போலத்
தாயைக் காண்பதரிது !
 
ஐஸ்வர்யா ராயைப் போல
அகிலத்தில் அழகி உண்டோ ?
 
எனக் காதில்
எப்போதும், எங்கும் கேட்கிறது
 
ஆனால் இங்கேதான்….
 


 

விபரமறியாப்
பெண்களின் முகம்
விகாரமாக்கப்பட்டது
திராவகத்தால்
 
“மீ  டூ,” மூலம்
குமுறல்களை
கொட்டியவர்களைத்
தேள் போல,
“கொட்டிய” சமூகமிது
 
நிர்பயாக்கள்
நிதர்சனமாய்
நிற்கின்றனர், காற்றிலே
 
குழந்தைத் திருமணங்கள்
குப்பையைப் போல
ஆங்காங்கே, நடக்கிறதே
 
வயது வேறுபாடில்லாமல்
வன்கொடுமைகள்….
விடையென்ன ? இதற்கு
 
பட்டம் பெற்றோம்,
பணம் சம்பாதிக்கிறோம்,
பதவியிலும் உள்ளோம்,
ஆனாலும்….
சுதந்திரமென்பது உள்ளதா ?
 
ஏனோ,
எல்லா  நாட்டிலும்
எங்களை மட்டும்
இரண்டாந்தரக்  குடிமக்களாய்
பார்க்கிறீர்கள்,
இது நியாயமா ?
 
எல்லாத் துறைகளிலும்
நாங்கள் கால்பதித்து
நிற்கிறோம் !
ஆனால்….
பாதுகாப்பாக இருக்கிறோமா ?
 
இன்னும்,
இரண்டாயிரம் ஆண்டுகளானாலும்,
எங்களுக்கு முழு விடுதலை
என்பது….
எட்டாக்கனிதானோ ?
 


 

ஏ…. நயவஞ்சகனே !
கிருஷ்ண பகவானே !
திரௌபதி மட்டும்தான்
தங்கையா உனக்கு ?
 
வைகுண்டத்தில்
உனக்கென்ன வேலை ?
ஓடி வா….
உன் தங்கைகளைக்
காப்பாற்றிட !
 
எழுந்து வா,
எட்டையபுரத்தானே,
இன்னும் உறக்கமேன் ?
எங்களுக்காகத்  தோள்கொடு
இன்னுமொருமுறை….
 


 

கயவர்கள் மீது
காரி உமிழச்சொன்னவனே !
காத்திருக்கிறோம்,
காலம் கடத்தாமல் வந்து விடு
 
அமிர்தமென நம்பியபின்
அமிலத்தை எங்கள் நாவில் ஊற்றும் சமூகமிது
 
மனித வேடமிட்ட
“மா”க்களைக்  கண்டறிய
முடியாமல் தவிக்கிறோம்
 
ஆழிப் பேரலைப் போல
ஆத்திரம் வருகிறது,
இந்த சமூகத்தின் மீது
 
ஒரு பக்கம் புகழ்ந்தும்
மறுபக்கம் இகழ்ந்தும்….
என்ன சமூகம் இது ?

– பா.தேவிமயில் குமார்