சென்னை: இரிடியம் மோசடி தொடர்பாக முன்னாள் தமிழ்ப்பட நடிகை ஜெயச்சித்ராவின் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் கைது செய்யப்பட்டுஉள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான, முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் (வயது 33). இவர் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர், கதாநாயகராக நடித்த படம் தோல்வியடைந்ததால், கதாநாயகம் ஆசையை கைவிட்டுவிட்டு படங்களுக்கு இசை அமைக்கும் பணியை செய்துவந்தார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, அரவிந்த் சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2 ‘ உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இவரது இசையும் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமடையவில்லை.
இந்த நிலையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து இரிடியம் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அம்ரீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அரிய வகை இரிடியம் தங்களிடம் இருக்கிறது என ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் (68) என்பவரிடம், ரூ. 26.20 கோடி கடனாக தந்தால், தங்களிடம் உள்ள இரிடியத்தை மலேஷியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்று, கூடுதலாக பணம் தருவதாக ஏமாற்றியுள்ளனர். அதைநம்பிய நெடுமாறனும், ரூ. 26.20 கோடியை கடனாக அம்ரீசுக்கு கொடுத்துள்ளார். ஆனால், கொடுத்த கடன் திரும்பாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஜெயசித்ரா வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜெயசித்ரா, மற்றும் அம்ரிஷ் மனைவி மட்டும் இருந்துள்ளனர். அம்ரிஷ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (15-ம் தேதி) சினிமா இசை அமைக்கும் பணிக்காக, சென்னை தி.நகரிலுள்ள ஒரு வீட்டிற்கு அம்ரீஷ் அங்கு வந்துள்ளார். இதை மோப்பம் பிடித்த காவல்துறையினர், அங்கு சென்று அமரீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடைபெற்ற விசாரணையில் இரியடித்தை விற்று தருவதாக கூறி நெடுமாறனிடம் ரூ. 26.20 கோடி பணத்தை வாங்கியதாக அம்ரீஷ் ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த கூட்டாளிகளை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.