பாக்தாத்,
ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் கர்பாலா புனித யாத்திரை சென்றுவிட்டு, நாடு திரும்பும் வழியில் ஹில்லாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது ஐஎஸ் இயக்கத்தின் தற்கொலை பயங்கரவாதி டிரக் வெடிகுண்டுமூலம் தாக்குதல் நடத்தியதில், 80 பேர் கொல்லப்பட்டனர்.
ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினரும் குர்திஷ் இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மைப் பழங்குடிப் பிரிவினரும் வாழும் நாடு ஈராக். சதாம்உசேன் கொல்லப்பட்ட பிறகு, பயங்கரவாதம் அங்கே தலைதூக்கி உள்ளது.
ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் புதிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சன்னி முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் நோக்கமே ஷியா பிரிவி முஸ்லிம்களை அழிப்பது. இவர்கள் சிரியாவின் வடபகுதியிலுள்ள அலெப்போ நகரிலிருந்து ஈராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரையிலான பகுதிகளை தன்வசமாக்கி ஷரியத் சட்டப்படியான இஸ்லாமிய அரசை (கிலாஃபத்) உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையிலான இந்த சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர், ஈராக்கிலுள்ள ஷியா மார்க்கத்தினர் மீதும் அவர்களது மசூதிகள் மீதும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இராக்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த ஈராக் அரசு படையினருடன் நேட்டோ படையினரும் இணைந்து ஐஎஸ் பயங்கர வாதிகளை அழித்து வருகிறார்கள்.
இருந்தாலும், ஈராக்கில் அவ்வப்போது ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுதான் வருகின்றன.
நேற்று ஈராக் தலைநகர் பாக்தாதில் இருந்து, 100 கிலோ மீட்டர் தெற்கே உள்ள ஹில்லா என்ற இடத்தில்தான் டிரக் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடைபெற்றது.
இந்த தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பலர் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷியா பிரிவு மக்கள். இவர்கள், கர்பாலா புனித யாத்திரை சென்றுவிட்டு, நாடு திரும்பும் வழியில் ஹில்லாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
அப்போது, விடுதி அருகே இருந்த பெட்ரோல் பங்க் மீது, ஐஎஸ் தற்கொலை தீவிரவாதி ஒருவன், வெடிபொருள் நிரம்பிய டிரக்கை ஓட்டிவந்து வெடிக்கச் செய்துள்ளான்.
இதில், அங்கிருந்த மக்களில், 80 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.