மொசூல்,
ஈராக்கில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சுவாசிக்க அவதிப்படுவதாக பிபிசி தெரிவித்து உள்ளது.
ஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் ராணுவம் மீட்டதாக செய்திகள் வந்தன. அமெரிக்க படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

அங்குள்ள பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி ஐஎஸ் பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
அரசு தாக்குதல் அதிகரித்து வருவதால், ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள், மொசூலின் தெற்கு திசையில் உள்ள 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
தீ கொளுந்து விட்டு எரிவதால், ஆகாயம் முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள ஏராளமான வன விலங்குகள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிந்துக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து வரும் மாசு, அங்குள்ள கால்நடைகளை கறுப்பாக மாற்றி உள்ளது.

மொசூலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 6 எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
சமீப நாட்களில், ஜிகாதி அமைப்பிடமிருந்து மொசூல் நகரை திரும்பக் கைப்பற்றும், தாக்குதலில் ஈராக் அரசுப்படைகள் சில வெற்றிகளைப் பெற்று முன்னேறி வந்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel