டெகரான்
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக ஈரான் கூறி உள்ளது.
நேற்று முன் தினம் ஈரான் எல்லையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பகை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் வான்வழியாக பறப்பதை அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. மேலும் பாதுகாப்பு கருதி ஜப்பான் நாட்டு விமான சேவை நிறுவனங்களும் தங்கள் விமானங்களி ஈரான் நாட்டு வான்வழியில் பறப்பதை நிறுத்தி உள்ளன.
நேற்று அமெரிக்க பிரதமர் டிரம்ப் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த தாக்குதலால் அப்பாவி ஈரானிய பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என பலரும் அறிவுறுத்தினார்கள். அதை ஒட்டி டிரம்ப் தாக்குதல் எண்ணத்தை கை விட்டு தனது உத்தரவை ரத்து செய்தார். டிரம்ப் ராணுவ தாக்குதல் உத்தரவு பிறப்பித்ததால் ஈரான் அரசுக்கு கோபம் அதிகரித்துள்ளது.
இன்று ஈரான் அரசு செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மொன்சாவி, “அமெரிக்காவின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. ஈரான் நாட்டு எல்லையில் எந்த ஒரு அத்துமீறலையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவின் எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம். அமெரிக்கா என்ன முடிவு எடுத்தாலும் ஒரு இஸ்லாமிய குடியரசை அழிப்பதை நாங்கள் பொறுக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.