ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூறியுள்ளார்.
பாஃக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல் சந்திப்பிலேயே, ஈரான் பிரதிநிதிகள் எங்களிடம் நேரடியாகவே 60% அளவில் செறிவூட்டப்பட்ட 460 கிலோ யூரேனியம் தங்களிடம் இருப்பதாகவும், அதனால் 11 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் என்பதைத் தெரிந்தே வைத்திருப்பதாகவும் கூறினர்” என்றார்.

ஆனால், அமெரிக்கத் தரப்பின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு நடந்த தாக்குதல்களில் ஈரானின் அணு நிலையங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டதால், அந்த யூரேனியத்தை அணு குண்டாக மாற்றும் திறன் தற்போது அவர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க கண்காணிப்பை முறியடித்து அந்த நிலைக்கு வந்ததிலேயே ஈரான் பிரதிநிதிகள் பெருமைப்பட்டதாக விட்கோஃப் தெரிவித்தார்.
மேலும், அணு எரிபொருளை செறிவூட்டுவது தங்களின் “மறுக்க முடியாத உரிமை” என்று ஈரான் தரப்பு கூறியதாக நினைவு கூர்ந்த அவர், “உங்களின் எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் நிறுத்துவது அமெரிக்க அதிபரின் உரிமை” என்று பதில் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு தன்னையும் ஜாரெட் குஷ்னரையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிவைத்ததாக விட்கோஃப் கூறினார்.
ஏவுகணை திட்டத்தை ஈரான் கைவிடுவது, போராளிக்குழுக்களுக்கு மறைமுக உதவி செய்வதை நிறுத்துவது, கடற்படை நடவடிக்கைகளைக் குறைப்பது, அணு செறிவூட்டலை நிறுத்துவது போன்ற விஷயங்களில் ஒப்பந்தம் செய்ய முயன்றதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் முதல் இரண்டு சந்திப்புகளிலேயே ஒப்பந்தம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டதாகவும், இருந்தாலும் கடைசியாக முயற்சி செய்ய மூன்றாவது சந்திப்பிலும் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தேவையான வசதிகள் இருந்தால் ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் ஆயுதத் தரத்திற்கு மாற்றப்படலாம் என்றும் அவர் அந்த பேட்டியில் மீண்டும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]