டெஹ்ரான்:

ட்ரோன் என்று அழைக்கப்படும் அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது. அதன்பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்து வருகிறது.

சமீபத்தில் தமது எண்ணெய் கப்பல்கள் மீ நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், ட்ரோன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் பிராந்திய வான் எல்லைக்குள் அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நுழைந்த போது ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

எனினும் இது குறித்து பதில் கூற அமெரிக்க ராணுவம் மறுத்துவிட்டது.

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக ஆயிரம் படை வீரர்களை அனுப்ப இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்ஸி பெலோசி பேட்டி

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோசி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா டரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியபோதும், ஈரான் மீது அமெரிக்காவுக்கு போர் பசி கிடையாது.
இந்த சம்பவம் குறித்து 20 சட்ட நிபுணர்கள் விவரிப்பார்கள்.

இது மோசமான நிலைமை என்றே நான் நினைக்கின்றேன். நமது நலனை எப்படி காப்பது என்பது குறித்து நாங்கள் வலுவான வியூகம் அமைத்து வருகின்றோம்.

ஈரானுடன் போரிட நம் அதிபர் ட்ரம்ப் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. ஈரானுடன் போரிடும் அளவுக்கு அமெரிக்காவுக்கு போர் பசியில்லை என்றார்.